Tuesday, 22 April 2014

டைரக்டர் விஜய்–நடிகை அமலாபாலுக்கு ஜூன் 7–ந் தேதி, நிச்சயதார்த்தம் கேரளாவில் நடக்கிறது

டைரக்டர் விஜய்–நடிகை அமலாபால் ஆகிய இருவருக்கும் வருகிற ஜூன் 7–ந் தேதி, கேரளாவில் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இவர்கள் திருமணம் சென்னையில், ஜூன் 12–ந் தேதி நடக்கிறது.
விஜய்–அமலாபால்
அஜீத் நடித்த ‘கிரீடம்’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர், விஜய். இவர், பட அதிபர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன். நடிகர் உதயாவின் தம்பி. ‘கிரீடம்’ படத்தை தொடர்ந்து, ‘பொய் சொல்லப்போறோம்,’ ‘மதராச பட்டினம்,’ ‘தெய்வத்திருமகள்,’ ‘தாண்டவம்,’ ‘தலைவா’ ஆகிய படங்களை விஜய் டைரக்டு செய்திருக்கிறார். இவர் டைரக்டு செய்த ‘சைவம்’ என்ற புதிய படம், மே 9–ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
அமலாபால், ‘விகடகவி,’ ‘சிந்து சமவெளி,’ ‘மைனா,’ ‘வேட்டை,’ ‘காதலில் சொதப்புவது எப்படி,’ ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்,’ ‘நிமிர்ந்து நில்’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். விஜய் டைரக்ஷனில், ‘தெய்வ திருமகள்,’ ‘தலைவா’ ஆகிய 2 படங்களிலும் அவர் நடித்தார்.
காதல் திருமணம்
அப்போது, டைரக்டர் விஜய்–நடிகை அமலாபால் ஆகிய இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதலை இருவருமே முதலில் மறுத்து வந்தார்கள். விஜய் டைரக்டு செய்த ‘சைவம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அமலாபால் வந்திருந்தார். விழாவில் அவர் பேசும்போது, ‘‘இது, என் குடும்ப விழா’’ என்று குறிப்பிட்டார்.டைரக்டர் விஜய்–அமலாபால் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முன்வந்தார்கள். அதைத் தொடர்ந்து டைரக்டர் விஜய்–அமலாபால் திருமணம் வருகிற ஜூன் மாதம் 12–ந் தேதி, சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில் நடக்கிறது. அன்று மாலை 6–30 மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
நிச்சயதார்த்தம்
முன்னதாக, டைரக்டர் விஜய்–அமலாபால் நிச்சயதார்த்த நிகழ்ச்சி, ஜூன் 7–ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் நடக்கிறது.நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், இரண்டு பேரின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் கலந்துகொள்கிறார்கள்.

No comments:

Post a Comment